வெற்றி யாருக்கு? பரபரப்பான கருத்துக் கணிப்புகள்



புதுடில்லி : காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே அதிக இடங்களைப் பெறும் எனவும், அதை விட சற்று குறைவான இடங்களை பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என, ஓட்டுப்பதிவுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த அணிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காது என்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவில்லாமல் எந்தக் கூட்டணியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகும் . லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடந்தது. ஐந்தாவது கட்ட தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது.

 

இதையடுத்து, நேற்று மாலை 5 மணிக்குப் பின் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தொலைக்காட்சி சேனல்கள் வெளியிடத் துவங்கின.'நியூஸ் எக்ஸ்' சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி 199 இடங்களைப் பெறும், தேசிய ஜனநாயக கூட்டணி 191 இடங்களைப் பெறும், மூன்றாவது முன்னணி 104 இடங்களையும், இதர கட்சிகள் 48 இடங்களைப் பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் 155 இடங்களையும், அதை விட இரண்டு இடங்கள் குறைவாக 153 இடங்களை பா.ஜ.,வும் பெறும் என, தெரிவிக்கப்பட்டது.

 

'நியூஸ் 24' என்ற சேனலின் கணிப்பில், 'ஐ.மு., கூட்டணி 218 இடங்களையும், தே.ஜ., கூட்டணி 194 இடங்களையும், மூன்றாவது அணி 101 இடங்களையும், நான்காவது அணி 30 இடங்களையும் பெறும்' என, கூறப்பட்டுள்ளது.பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்திய கருத்துக் கணிப்பில், 'தேசிய ஜனநாயக கூட்டணி 215 இடங்களையும், ஐ.மு.கூட்டணி 170 இடங்களையும், மூன்றாவது அணி 125 இடங்களையும், நான்காவது அணி 33 இடங்களையும் பெறும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

'ஸ்டார் நியூஸ்' சேனலின் கருத்துக் கணிப்பில், ஐ.மு., கூட்டணி 199 இடங்களையும், இதில் காங்கிரஸ் மட்டும் 155 இடங்களையும், தே.ஜ., கூட்டணி 196 இடங்களையும், இதில் பா.ஜ., மட்டும் 153 இடங்களையும், மூன்றாவது அணி 100 இடங்களையும், இதர கட்சிகள் 48 இடங்களையும் பிடிக்கும் என, கூறப் பட்டுள்ளது.மாநிலவாரியாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம் மற்றும் பீகாரில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. கேரளா, அசாம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒரிசா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பெறும். ஆந்திராவில் தெலுங்கு தேசம் - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 20 இடங்களைப் பிடிக்கும், காங்கிரஸ் 15 தொகுதிகளைப் பிடிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

'யுடிவிஐ' சேனலின் கருத்துக் கணிப்பில், 'ஐ.மு., கூட்டணி 195 இடங்களையும், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் லோக்ஜனசக்தி கட்சி பெறும் இடங்களையும் சேர்த்தால் 227 இடங்களையும், தே.ஜ., கூட்டணி 189 இடங்களையும், இதர கட்சிகள் 14 இடங்களையும் பெறும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


'டைம்ஸ் நவ்' சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 198 இடங்களையும், காங்கிரஸ் மட்டும் 154 இடங்களையும் பெறும் என்றும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 183 இடங்களையும், இதில் பா.ஜ., மட்டும் 142 இடங்களையும், மூன்றாவது அணி 112 இடங்களையும், இதர கட்சிகள் 50 இடங்களையும் பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாவது அணியில் இடதுசாரி கட்சிகள் 38 இடங்களை பெறும். சமாஜ்வாடி கட்சி -23, பகுஜன் சமாஜ் கட்சி -27, அ.தி.மு.க., - 24, தெலுங்கு தேசம் -20, பிஜு ஜனதாதளம் -8, பிரஜா ராஜ்யம் -4 , மதசார்பற்ற ஜனதாதளம் -3 இடங்களையும் பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

'சிஎன்என் ஐபிஎன்' தொலைக் காட்சி சேனலின் கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 185 முதல் 205 இடங்களையும், இதில், காங்கிரஸ் மட்டும் 145 முதல் 160 இடங்களையும் பெறும்.பா.ஜ., தலைமையிலான கூட்டணி 165 முதல் 185 இடங்களையும், இதில், பா.ஜ., மட்டும் 135 முதல் 150 இடங்களையும் பிடிக்கும். மூன்றாவது அணி 110 முதல் 130 இடங்களையும், இதில், இடதுசாரிக் கட்சிகள் மட்டும் 30 முதல் 40 இடங்களையும், நான்காவது அணி 25 முதல் 35 இடங்களையும், இதர கட்சிகள் 20 முதல் 30 இடங்களையும் பிடிக்கும். பகுஜன் சமாஜ் கட்சி 25 முதல் 30 இடங்களையும் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக நிலவரம் : தமிழகத்தில் மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி 24 இடங்களையும், அதே அணியில் இடம் பெற் றுள்ள இடதுசாரி கட்சிகள் நான்கு தொகுதிகளையும் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி நான்கு இடங்களிலும், தி.மு.க., ஏழு இடங்களிலும் வெற்றி பெறும் என, 'டைம்ஸ் நவ்' சேனலின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes